அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல. 28/98 இன் பிரகாரம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்ற அரச அலுவலர்கள் ஊக்குவிப்பு கொடுப்பனவு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும்.
இக்கொடுப்பனவானது 1998.03.11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் பல நிறுவனங்களில் இச்சுற்றறிக்கையை விளங்கிக் கொள்வதிலுள்ள குறைபாடுகள் காரணமாக பல அரச உத்தியோகத்தர்கள் குறிப்பாக ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் இக்கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. எனவே சுற்று நிருபத்தை சரியாக விளங்கிக் கொள்வதன் மூலம் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய இப்பதிவு உதவியாக அமையும். அதற்கேற்ற வகையில் அடிப்டைத் தகைமைகளை சுற்று நிருபத்தில் பார்வையிடுவதோடு நடைமுறைச் சிக்கல்களை இப்பதிவில் பார்வையிடுங்கள்.
Circular PDF Download
இச்சுற்றறிக்கையின் படி முதலாம் மொழி தவிர ஏனைய இரண்டாம், மூன்றாம் மொழிகளுக்கே ஊக்குவிப்புக் கொடுப்பனவைப் பெற முடியும். ஒரு உத்தியோகத்தரின் முதலாம் மொழி எது? 2ஆம், 3ஆம் மொழி எதுவென தீர்மானிப்பதிலேயே நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ஆங்கிலப் பாட ஆசிரியர்களின் முதலாம் மொழி ஆங்கிலம் என தவறாக தீர்மானிக்கப்பட்டு அவ்ரகளுக்கான கொடுப்பனவு மறுக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகின்றது.
முதலாம் மொழியைத் தீர்மானித்தல்
ஊக்குவிப்புக் கொடுப்பனவிற்கான முதலாவது மொழி எனப்படுவது உத்தியோகத்தர் தனத் தற்போதைய பதவியில் அல்லது சேவையில் சேர்ந்த மொழியாகும். (29/1998 இன் 2.2 ஆம் பிரிவு)
Example
உத்தியோகத்தர் தழிழ் மொழி மூலம் கல்வி கற்றிருந்தாலும் அவர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது ஆங்கில மொழி மூலம் எனின் அவரது முதலாம் மொழி ஆங்கிலம் ஆகும். தமிழ், சிங்களம் ஆகியன முறையே இரண்டாம், மூன்றாம் மொழிகளாகும்.
இவர் கொடுப்பனவிற்காக ஆங்கில மொழிக்கு விண்ணப்பிக்க முடியாது. எனினும் தழிழ், சிங்கள மொழிகளில் குறித்த கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்கலாம். (இம்மொழிகளில் குறித்த தேர்ச்சிகளைப் பெற்றிருப்பின் மாத்திரம்)
மொழிமூலம் தௌிவற்றதாயின்,
Example - 01
உத்தியோகத்தர் தழிழ் மொழி மூலம் கல்வி கற்றிருக்கும் அதேவேளை அவர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொழி மூலம் தௌிவற்றதாக/ உறுதிப்படுத்த முடியாததாக இருப்பின் அவரது முதலாம் மொழி தழிழ் ஆகும். சிங்களம், ஆங்கிலம் ஆகியன முறையே இரண்டாம், மூன்றாம் மொழிகளாகும்.
இவர் கொடுப்பனவிற்காக தழிழ் மொழிக்கு விண்ணப்பிக்க முடியாது. எனினும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறித்த தேர்ச்சிக் கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்கலாம். (இம்மொழிகளில் குறித்த தேர்ச்சிகளைப் பெற்றிருப்பின் மாத்திரம்)
Example - 02
உத்தியோகத்தர் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றிருக்கும் அதேவேளை அவர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொழி மூலம் தௌிவற்றதாக/ உறுதிப்படுத்த முடியாததாக இருப்பின் அவரது முதலாம் மொழி ஆங்கிலம் ஆகும். தமிழ், சிங்களம் ஆகியன முறையே இரண்டாம், மூன்றாம் மொழிகளாகும்.
இவர் கொடுப்பனவிற்காக ஆங்கில மொழிக்கு விண்ணப்பிக்க முடியாது. எனினும் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் குறித்த தேர்ச்சிக் கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்கலாம். (இம்மொழிகளில் குறித்த தேர்ச்சிகளைப் பெற்றிருப்பின் மாத்திரம்)
ஆங்கிலப் பாடம் மற்றும் ஆங்கில மொழியுடன் தொடர்புடைய ஆசிரியர்கள் இக்கொடுப்பனவைப் பெறல்
Example - 01
ஆங்கில மொழி மூலம் ஆங்கிலப் பாடத்திற்கென நியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான கொடுப்பனவைப் பெற முடியாது.
ஆங்கிலம் அவரது முதலாம் மொழியாகும்.
Example - 02
மொழி மூலம் குறிப்பிடப்படாமல் ஆங்கிலப் பாடத்திற்கென நியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவர் நியமன மொழிமூலத்தை உறுதி செய்ய முடியாதிருக்கும் அதேவேளை அவர் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றிருப்பின் ஆங்கில மொழிக்கான கொடுப்பனவைப் பெற முடியாது.
கல்வி கற்ற மொழியான ஆங்கிலம் அவரது முதலாம் மொழியாகும்.
Example - 03
தமிழ் மொழிமூலம் ஆங்கிலப் பாடத்திற்கென நியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவர் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றிருப்பின் ஆங்கில மொழிக்கான கொடுப்பனவைப் பெற முடியும்.
நியமன மொழியான தமிழ் மொழி அவரது முதலாம் மொழியாகும்.
Example - 04
மொழி மூலம் குறிப்பிடப்படாமல் ஆங்கிலப் பாடத்திற்கென நியமனம் பெற்ற ஆசிரியர் நியமன மொழிமூலத்தை உறுதி செய்ய முடியாதிருக்கும் அதேவேளை அவர் தமிழ் மொழி மூலம் கல்வி கற்றிருப்பின் ஆங்கில மொழிக்கான கொடுப்பனவைப் பெற முடியும்.
கல்வி கற்ற மொழியான தமிழே அவரது முதலாம் மொழியாகும். கற்பபிக்கும் பாடம் ஒருபோதும் முதலாம் மொழியாகாது.
பிரச்சினை
மேலுள்ள உதாரணம் 03, 04 இல் குறிப்பிடப்பட்ட ஆசிரியர்களே இக்கொடுப்பனவை பெற முடியாமல் சிரமப்படுபவர்களாவர். இதற்குக் காரணமாக அவர்களது முதலாம் மொழியைத் தீர்மானிக்க முடியாதிருப்பதால் நிறுவனங்களில் அவரது கற்பிக்கும் பாடம் ஆங்கிலம் ஆகையால் அவரது முதலாம் மொழியும் ஆங்கிலம் என தவறாக புரிந்து கொள்வதாகும்.
பிரச்சினைக்கான திர்வு
மேற்சொன்னவாறு முதலாம் மொழியை உறுதி செய்ய முடியாதவர்கள் அதனை உறுதி செய்ய வேண்டும். அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.
- நியமன மொழி மூலத்தை உறுதிப்படுத்தல். தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் பிரகாரம் தங்களது நியமனம் தொடர்பான தகவல்களை சரியாகக் குறிப்பிட்டு தாபணப் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து நியமன மொழிமூலத்தை உறுதிப்படுத்தல்.
- கல்வி கற்ற மொழிமூலத்தை குறித்த கல்வி நிறுவனத்திலிருந்து உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ளல்.
- அவற்றை உறுதிப்படுத்திய பின்னர் குறித்த ஆவணங்களுடன் கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment