இலங்கையின் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட வேறு மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களின் உள்நாட்டுப் பாட நெறிகளைத் முழு நேரம் அல்லது பகுதி நேரம் தொடர்வதற்காக கற்கை விடுமுறை வழங்குதல் தொடர்பாக 26/2013 ஆம் இலக்க சுற்றறிக்கை தௌிவுபடுத்துகின்றது.
எனினும் சுற்றறிக்கையின் பிரகாரம் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதில் சுற்றறிக்கையை சரியாக விளங்கிக் கொள்ளாமை, விண்ணப்ப நடைமுறைகள் தெரியாமை, உட்சேர்க்க வேண்டிய ஆவனங்களின் குறைபாடு மற்றும் கால தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் பல அரச அலுவலர்கள் இவ்விடுமுறையைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு இப்பதிவு வழிகாட்டும்.
- கற்கை விடுமுறை பெறக்கூடிய உத்தியோகத்தர்கள்.
- கற்கை விடுமுறை பெறக்கூடிய பாடநெறிகள் (இணைப்பு 01)
- விண்ணப்பிக்க வேண்டிய ஒழுங்குமுறை.
- முழு நேரப் பாட நெறிக்காக விடுமுறை பெறல்.
- வார இறுதிப் பாடநெறிக்காக விடுமுறை பெறல்.
- இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பாடநெறி தொடர்வதற்கான விடுமுறை.
- பரீட்சைக்கான விடுமுறை.
- விண்ணப்பப் படிவம் (இணைப்பு - 02)
சுற்றுநிருபம் 26/2013 இன் பிரகாரம் கற்கை விடுமுறையைப் பெற்றுக் கொள்பவர்கள் பின்வரும் 04 சந்தர்ப்பங்களில் விடுமுறைக்கான அனுமதி பெற்றக்கொள்ள நேரிடும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தரப்பங்களில் தனித்தனியாக அனுமதி பெற வேண்டியதாக இருப்பினும் அனுமதி பெறும் விதங்கள் மாறுபட்டனவாகும்.
- கற்கை நெறியைத் தொடர்வதற்கான அனுமதி.
- கற்கை நெறியின் போது நாட் பாடசாலைக்குச் செல்வதற்காக கடமை லீவு பெறுவதற்கான அனுமதி.
- பரீட்சைக்காக கற்றல் விடுமுறை பெறுவதற்கான அனுமதி
- கற்கைநெறி அனுமதிக் காலத்தினை நீடிப்பதற்கான அனுமதி.
குறிப்பு:
எந்தவொரு லீவினையும் கட்டாயம் அனுமதி பெற்று பெற்றுக் கொள்வதோடு அதன் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும். உதாரணமாக பரீட்சை அல்லது நாட்பாடசாலையானது வார இறுதி நாட்களில் அல்லது விசேட விடுமுறை தினங்களில் அல்லது பாடசாலை தவணை விடுமுறை நாட்களில் நடைபெற்றாலும் கூட அதற்காக நிறுவனத் தலைவரின் அனுமதி பெறுதல் கட்டாயமாகும். அவ்வாறு பெறாத விடத்து கற்கை நெறியின் இறுதி பரீட்சை விடுமுறைகளைப் பெற்றுக்கொள்ள அல்லது கற்கை நெறியின் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும்.
1. கற்கை நெறியைத் தொடர்வதற்கான அனுமதி.
சம்பளத்துடனான எந்தவொரு கற்கை நெறியையும் தொடர விரும்புபவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய முதலாவது அனுமதியே இதுவாகும்.
கற்கை நெறிக்கு தெரிவு செய்வதற்கான போட்டிப்பரீட்சை விண்ணப்பங்கள் மற்றும் கற்கை நெறிக்கு பதிவு செய்வதற்காக பதவியினை உறுதிப்படுத்தும் நிறுவனத் தலைவரின் கடிதங்கள் போன்றவை கற்கை நெறியைத் தொடர்வதற்கான அனுமதியாகக் கருதப்பட மாட்டாது.
இம் முதலாவது அனுமதி அமைச்சின் செயலாளரிடமே பெறல் வேண்டும். இவ் அனுமதி பெறாவிட்டால் ஏனைய எந்த அனுமதியும் பெற முடியாது. கோரவும் முடியாது.
கற்கை நெறியைத் தொடர்வதற்கான அனுமதிக்காக நாம் எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
குறித்ததொரு கல்வி நிறுவனத்தில் தங்களைப் பதிவு செய்த பின்னரும் முதலாவது வகுப்பிற்கு செல்வதற்கு முன்னருமான காலப்பகுதியில் இக்கற்கை நெறிக்காக தான் தெரிவு செய்யப்பட்டுள்ளதை வௌிப்படுத்தி குறித்த கற்கை நெறியைத் தொடர்வதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்தல் வேண்டும்.
விண்ணப்பத்திற்கான செயலாளரின் அனுமதி கற்கை நெறி நடைபெறுவதற்கு முன்னர் அல்லது கற்கை நெறி நடைபெறும் காலப்பகுதியில் தாமதமாகவும் கிடைக்கப் பெறலாம். எனினும் விண்ணப்பதாரி உரிய காலத்திற்குள் அனுமதிக்கு விண்ணப்பிப்பது கட்டாயமானதாகும்.
உரிய காலத்திற்குள் அனுமதிக்கு விண்ணப்பிக்காது ஒரு நாள் தாமதமானாலும் உங்களது விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு குறித்த செயலாளருக்கு அதிகாரம் உண்டு.
கற்கைநெறியை தொடர்வதற்கான அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
பிரதானமாக பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்படல் வேண்டும். சில கல்வி வலயங்களில் தேவையின் பொருட்டு இவற்றிற்கு மேலதிகமான ஆவணங்கள் கோரப்படலாம் (Ex: செயலொழுங்குப் பட்டியல்).
அதே போன்று ஆவணங்களின் எண்ணிக்கையும் (4 Set / 5 Set) என வேறுபடலாம். அவ்வாறு கோரப்படின் அவற்றையும் இணையுங்கள்.
- விரிவான கற்கை விடுமுறைக்கான விண்ணப்பப் படிவம் (இணைப்பு - 2) - Download
- பாடநெறிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி (Ex: நீங்கள் PGDE கற்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனும் கடிதத்தின் பிரதி)
- நிரந்தர நியமனக் கடிதத்தின் பிரதி.
- கடமையைப் பொறுப்பேற்ற கடிதத்தின் பிரதி.
- பதவி உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் அக்கடிதத்தின் பிரதி.
- கற்கை விடுமுறைக்கான விண்ணப்பக் கடிதம் - View Sample Letter
- குறித்த காலத்தில் பதில் கடமை புரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக நிறுவனத் தலைவரின் பரிந்துரை. - View Sample Letter
- பதவி நிரந்தரப்படுத்தப்படுவதற்கான கடிதத்தின் உறுதி செய்யப்பட்ட பிரதி.
- தொடரும் பாடநெறி உத்தியோகத்தரின் தொழில் விருத்திக்குரியதாக நிறுவனப் பொறுப்பாளரின் பரிந்துரை (வாண்மை விருத்திக் கடிதம்) - View Sample Letter
- கற்கை நெறியின் காலத்தினை உறுதிப்படுத்தும் கடிதம்.
- குறித்த கற்கை நிலையத்தில் பதிவு செய்த Record Book இன் முன் பக்க பிரதி.
2. கற்கை நெறியின் போது நாட் பாடசாலைக்குச் செல்வதற்காக கடமை லீவு பெறுவதற்கான அனுமதி.
கற்கை நெறியின் போது நடைபெறும் வகுப்புக்கள் நாட்பாடசாலை எனப்படும். வார இறுதி நாட்களுக்காக வழங்கப்படும் திங்கள் அல்லது வௌ்ளி விடுமுறை மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்றவற்றில் வார நாட்களில் நடைபெறும் வகுப்பில் கலந்து கொள்வதற்கான ஒரு நாள் விடுமுறை போன்றவை இவற்றிலடங்கும்.
நாட் பாடசாலை/ வகுப்பிற்குச் செல்வதற்கு வழமையாக ஏதாவது ஒரு கடமைக்காக நீங்கள் கடமை விடுமுறை பெறும் முறையே பின்பற்றப்படும். அதாவது நாட் பாடசாலைக்குச் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் முன் அனுமதி பெறல். நாட்பாடசாலை நிறைவடைந்த பின் அதற்கான லீவுப் படிவங்களை பூர்த்தி செய்து ஒப்பங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
முன் அனுமதி பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- முன் அனுமதி கோரும் கடிதம்/ படிவம்
- கற்கை நெறியை தொடர்வதற்காக செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொண்ட முதலாவது அனுமதிக் கடிதத்தின் பிரதி. (அனுமதிக் கடிதம் இதுவரை கிடைக்கவில்லையாயின் அதனை பின்னர் வழங்கலாம். வழங்காவிட்டால் அந்த லீவானது சொந்த லீவாகக் கருதப்படும்)
- நாட் பாடசாலை நேரசூசி
அனுமதிக்கான தொடர் ஒழுங்கு
சில வலயங்களில் இதனை இலகுபடுத்துவதற்காக நாட்பாடசாலை செல்வதற்கு மட்டும் முன் அனுமதி பெறாமல் சாதாரணமாக அதிபருக்கு அறிவித்து விட்டுச் செல்வதற்கும் அனுமதிக்கலாம். எனினும் உமது வலயத்தின் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
நாட் பாடசாலை நிறைவடைந்த பின்னர் மேலே முன் அனுமதிக்காக வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் லீவுப் படிவம், நாட் பாடசாலையில் வழங்கப்படும் வரவுச் சான்றிதழ் என்பவற்றோடு இணைத்து அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பெறலாம்.
3. பரீட்சைக்காக கற்றல் விடுமுறை பெறுவதற்கான அனுமதி
கற்கை நெறியின் போது நடைபெறும் பரீட்சைகளுக்காக கற்றல் விடுமுறை பெறுவதற்காக தனியாக அனுமதி பெறல் அவசியமாகும்.
இதற்காக 26/2013 சுற்றறிக்கையின் பிரிவு 6 இற்கு அமைய பாடநெறியின் இறுதியில் பரீட்சை நடைபெறும் தினம் உட்பட்ட காலத்திற்குள் அல்லது பரீட்சைக்கு முன்னர் உயர்ந்தபட்சம் 20 நாட்கள் (வார இறுதி நாட்கள் மற்றும் விசேட விடுமுறை நாட்கள் தவிர) பரீட்சைக்குத் தயாராகுவதற்கு கடமை விடுமுறை பெற்றுக் கொள்ளலாம்.
பரீட்சையானது இரண்டு கட்டமாக நடைபெறுமாயின் (Two Semester) இரண்டு கட்டங்களுக்கும் சேர்த்து 20 நாட்களே வழங்கப்படும். அதனை தேவைக்கேற்ப இரண்டாக பிரித்து இரு தடவைகள் பெற்றுக் கொள்ள முடியும்.
தேவையான விடுமுறைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் முன் அனுமதி பெறல். பரீட்சை நிறைவடைந்த பின் அதற்கான லீவுப் படிவங்களை பூர்த்தி செய்து ஒப்பங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
அனுமதிக்கான தொடர் ஒழுங்கு
அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பெற்றுக் கொள்ளல் போதுமானதாகும். எனினும் கற்கை நெறியைத் தொடர்வதற்கான முதலாவது அனுமதி செயலாளரிடம் பெற்றிருத்தல் அவசியம். அதன் பின்னரே வலயக் கல்விப் பணிப்பாளர் நாட்பாடசாலைக்கு அனுமதிக்க முடியும்.
முன் அனுமதி பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- முன் அனுமதி கோரும் கடிதம்/ படிவம் Sample Letter
- கற்கை நெறியை தொடர்வதற்காக செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொண்ட முதலாவது அனுமதிக் கடிதத்தின் பிரதி.
- பரீட்சை அனுமதி அட்டையின் பிரதி.
- பரீட்சை நேரசூசி
- பதில் கடமை சம்மதக் கடிதம்
- கற்கை நெறிப் பதிவுச் சான்றிதல் (Record book)
- இவ்வனுமதியைப் பெற்ற பின்னரே விடுமுறையில் செல்ல வேண்டும்.
பரீட்சை நிறைவடைந்த பின்னர் மேலே முன் அனுமதிக்காக வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் லீவுப் படிவம், பரீட்சையின் போது வழங்கப்படும் வரவுச் சான்றிதழ் என்பவற்றோடு இணைத்து அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பெறலாம்.
4. கற்கைநெறி அனுமதிக் காலத்தினை நீடிப்பதற்கான அனுமதி
முதலாவது அனுமதியைப் பெற்றுக்கொண்ட பின் கற்கை நெறியைத் தொடரும் போது ஏதாவது காரணங்களால் கற்கை நெறி குறித்த காலத்திற்குள் நிறைவுபெறாமல் போகலாம்.
உதாரணமாக 2023.08.01 முதல் 2024.07.31 வரை முதல் அனுமதி பெற்று கற்கைநெறியைத் தொடரும் போது 2024.07.31 இற்குள் நிறைவு பெறாமல் நீடிக்கப்படுமாயின் மேலதிகமாக நீடிக்கப்படும் காலத்திற்கு பெற்றுக் கொண்ட அனுமதியை மீண்டும் நீடித்துக் கொள்ளல் அவசியமாகும்.
அவ்வாறு அனுமதி பெறாவிட்டால் அதன் பின்னர் கற்கை நெறி தொடர்பான எந்தவொரு விடுமுறையையும் பெற முடியாது. அதன் பின்னர் கற்கை நெறியின் கொடுப்பனவையும் பெற முடியாது.
அனுமதிக்கான தொடர் ஒழுங்கு
இதன் தொடர் ஒழங்கானது முதலாவது முறை பெற்றது போன்றே அமைச்சின் செயலாளர் வரை செல்லும்.
கற்கை நெறியின் காலத்தை நீடித்து அனுமதி பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- கற்கை நெறியின் கால எல்லையை நீடிக்கக் கோரும் கடிதம். Sample Letter
- கற்கை நெறியை தொடர்வதற்காக செயலாளரிடம் இருந்து முதலாவதாகப் பெற்றுக் கொண்ட அனுமதிக் கடிதத்தின் பிரதி.
- கற்கை நெறி நீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தி கற்கை நிலையத்தினால் வழங்கப்படும் கடிதத்தின் பிரதி.
இவற்றுடன் முதலாவது அனுமதியின் போது வழங்கப்பட்ட பின்வரும் அனைத்து ஆவனங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- விரிவான கற்கை விடுமுறைக்கான விண்ணப்பப் படிவம் (இணைப்பு - 2) - Download
- பாடநெறிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
- நிரந்தர நியமனக் கடிதத்தின் பிரதி.
- கடமையைப் பொறுப்பேற்ற கடிதத்தின் பிரதி.
- பதவி உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் அக்கடிதத்தின் பிரதி.
- கற்கை விடுமுறைக்கான விண்ணப்பக் கடிதம் - View Sample Letter
- குறித்த காலத்தில் பதில் கடமை புரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக நிறுவனத் தலைவரின் பரிந்துரை. - View Sample Letter
- பதவி நிரந்தரப்படுத்தப்படுவதற்கான கடிதத்தின் உறுதி செய்யப்பட்ட பிரதி.
- தொடரும் பாடநெறி உத்தியோகத்தரின் தொழில் விருத்திக்குரியதாக நிறுவனப் பொறுப்பாளரின் பரிந்துரை (வாண்மை விருத்திக் கடிதம்) - View Sample Letter
- கற்கை நெறியின் காலத்தினை உறுதிப்படுத்தும் கடிதம்.
- குறித்த கற்கை நிலையத்தில் பதிவு செய்த Record Book இன் முன் பக்க பிரதி.

No comments:
Post a Comment